news-and-events

News

தமிழகத்தில் அதிகரிக்கும் காய்ச்சல் கொரோனாவின் தொடர்ச்சியா?

தமிழகத்தில் அதிகரிக்கும் காய்ச்சல் கொரோனாவின் தொடர்ச்சியா?

கொரோனா பாதிப்பில் இருந்து அனைவரும் இயல்பு நிலைமைக்கு திரும்பி வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக காய்ச்சல் பாதிப்பு சற்று அதிகமாகியுள்ளதை காணமுடிகிறது. முதல் நாளே காய்ச்சல், தொண்டை வலி, இருமலுடன் நோயாளிகள் மருத்துவமனைக்குக்கு வருவதாக பி.எஸ்.ஜி மருத்துவமனையின் தொற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் முரளி தெரிவிக்கிறார். “ஆனால், இது ஒருவருக்கு பொதுவாக ஏற்படும் சாதாரண காய்ச்சல் போன்றது தான், மிகவும் தீவிர தன்மை கொண்டதாக, கொரோனாவைப் போல இறப்பை ஏற்படுத்துவதாக இருக்காது” எனவும் அவர் கூறினார். இதுபற்றி டாக்டர் முரளி பகிர்ந்து கொண்டதாவது: தற்போது பரவி வரும் காய்ச்சல் ஒரு வகை   வைரஸினால் ஏற்படுகிறது. இது நுரையீரலை தாக்கக் கூடிய வைரஸ். தமிழக அளவில் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் இந்த வைரஸ் தொற்று காணப்படுகிறது. மேலும், காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. காய்ச்சல், தொண்டை வலி, மூக்கில் நீர் ஒழுகுதல், தும்மலுடன் ஆரம்பிக்கும். பிறகு தானாகவே சரியாகி விடும். நீண்ட நாள் பாதிப்பு எதுவும் இந்த காய்ச்சலினால் ஏற்படாது. சளி, தும்மல் வருவது ஓரளவுக்கு இருக்கும். அதே வேளையில், இருமல் தொடர்ந்து 20 நாள் அல்லது ஒரு மாதம் வரை கூட இருக்கலாம். கொரோனாவுக்கும், இந்த வகை காய்ச்சலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பருவ காலத்தில் ஏற்படும் பொதுவான வைரஸ் காய்ச்சல் தான் இது. காய்ச்சல் பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தால், எளிதாக பரவிவிடும். பொதுவாகவே குளிர் அல்லது மழை காலத்தில் வைரஸ் தொற்று அதிகமாக ஏற்படும். அதனால் தான், இந்த வைரஸினால் ஏற்படும் காய்ச்சலும் அதிகம் பரவி உள்ளது. கோடை காலம் ஆரம்பித்த உடன் வைரஸ் தாக்கம் குறைய ஆரம்பித்து விடும். கொரோனாவுக்கு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான மாஸ்க் அணிதல், கூட்டம் மிகுந்த இடங்களை தவிர்த்தல், அடிக்கடி கை கழுவுதல் ஆகியவற்றை கடைபிடிப்பதன் மூலம் இந்த வைரஸ் தொற்று தாக்காதவாறு தற்காத்துக் கொள்ள முடியும். இந்த காய்ச்சல் அனைத்து வயதினரையும் தாக்கும். குழந்தைகளில் இருந்து வயதானவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். மூன்று அல்லது நான்கு நாட்கள் காய்ச்சல் இருக்கும். சிலருக்கு இருமல் தீவிரமாக கூட இருக்கலாம். அதற்கேற்ப மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மருந்து எடுத்துக் கொள்ளும் போது தீவிர தன்மை குறைந்து விடும். நுரையீரல் ஏற்கனவே பாதிப்பு அடைந்து இருந்தால், புதிதாக பிற தொற்று உள் நுழையும் போது, உடல் நல பாதிப்பு சற்று அதிகமாகவே இருக்கும். இந்நோயாளிகளுக்கு மூச்சு திணறல் அதிகமாக ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. பொதுவாக குளிர் காலத்தில் நுரையீரலைத் தாக்கும் வைரஸ் தொற்று அதிகமாக ஏற்படும்.   கொரோனா நோய் தொற்று தற்போது அதிகமாகவில்லை. கட்டுப்பாட்டில் தான் உள்ளது. வைரஸின் வீரிய தன்மை குறைந்துள்ளது. கிட்டத்தட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால், கிடைத்த எதிர்ப்பு சக்தி மற்றும் குறிப்பிட்ட சதவீத மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விட்டதால் அதில் இருந்து கிடைத்த எதிர்ப்பு சக்தி நம் உடலை பாதுகாக்கும் என தெரிவித்தார்.

Copyrights © 2024 PSG Hospitals. All Rights Reserved.